ஆண் புலிக்கு வனத்துறையினர் சிகிச்சை!
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி அமைச்சராகம் மஞ்சம்பட்டி கழுகு ஓடை பகுதியில் சில நாட்களுக்கு முன்பாக வனவிலங்கு வேட்டை தடுப்பு பிரிவினர் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒன்பது வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று வயிற்றுப் பகுதியில் கயிறு கட்டிய நிலையில் அதனால் இறுக்கப்பட்டு காயம் ஏற்பட்டு உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்துள்ளது.
பின்னர் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறை கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி புலியினை கூண்டில் அடைத்தனர். பின்னர் புலியின் உடலில் மாட்டியிருந்த கயிற்றை அகற்றி சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் உடல்நிலை தேறிய புலி மயக்கம் தெளிந்த கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
புலியின் வயிற்றில் கயிறு எப்படி கட்டப்பட்டது, வேட்டை முயற்சியா? என்பது போன்ற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயம் காரணமாக புலிக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய புலியின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக புலிகள் காப்பக கலை இயக்குனர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.