ரப்பர் மரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் கேரள - குமரி எல்லை பகுதி பாறசாலை என்ற இடத்தை சேர்ந்த டாக்டர் ஜேக்கப் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டம் உள்ளது. இதில் 1600 ரப்பர் மரங்களை நட்டு பராமரித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அந்தப் பகுதியில் லாரியுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென டாக்டர் ஜேக்கப்புக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்துக்குள் அத்துமீறி புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரப்பர் மரங்களை நவீன இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுத்து லாரியில் அடுக்கிக் கொண்டிருந்தனர். இந்த வகையில் சுமார் 80 ரப்பர் மரங்களை வெட்டி சாய்த்தனர்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் டாக்டர் ஜேக்கப்புக்கு தகவல் தெரிவித்ததும், அவர் தக்கலை போலீசில் புகார் அளித்து, சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த ஜெயிசிங் (45) என்பவர் சம்மந்தபட்ட இடம் அவருக்கு சொந்தமானது என கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சென்றனர். போலீசை கண்டதும் அங்கிருந்த கும்பல் தெறித்து ஓடினர். ஆனால் ஜெய்சிங் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் மரங்களை ஏற்றி செல்ல தயாராக நின்ற லாரியையும் பறிமுதல் செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்சிங் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.