மாபெரும் தமிழ் கனவு - தமிழ்நாடு பொருளாதாரம் கருத்தரங்கு
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ் இணையக்கல்விக்கழகம் சார்பில், தமிழ்நாடு பொருளாதாரம் என்ற தலைப்பில் 2024 -2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வரவு செலவு திட்ட அடிப்படையில் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியினை புரிந்து கொள்ளும் வகையில், 1000 கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் 7-வது தமிழ்க்கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்குவதற்கும், சிறந்த கருத்துரைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காகவும் மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி கடந்த ஒரு வருடமாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.
நமது மாவட்டத்தில் இதுவரை 6 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இன்று 7-வது நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த வரலாற்றை பற்றி, எழுத்துக்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். இதன் மூலம் பொருளாதாரம், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், சேவைகள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பது பற்றி நமது இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. வெளிநாட்டினர் தங்கத்தை கொடுத்து மிளகு உள்ளிட்ட பொருட்களை பெற்று சென்றார்கள் என்ற குறிப்புகள் இருந்திருக்கின்றன.
இதுபோன்ற மிகப்பெரிய பொருளாதார கனவுகளோடு இருந்த ஒரு சமுதாயம் தமிழ் சமுதாயம். நாம் தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாற்றம் குறித்தும், படித்துக் கொண்டிருக்கிறோம். நமது இலக்கியத்தை எடுத்துப் பார்த்தால், சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஒரு உயிரை கொலை செய்வது போன்ற குற்றமாக பார்க்கப்பட்டிருக்கிறது. மரத்தை வெட்டுவது, காற்று, நீர் நிலைகள் மாசுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. அவ்வளவு பெரிய பாரம்பரியத்தில், நாம் தற்போது எங்கே இருக்கிறோம். நாம் எதை நோக்கி செல்ல வேண்டும். நாம் வாழக்கூடிய காலகட்டத்தில், இந்த சமூகத்தை மேலும் சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்.
நம்முடைய பாடபுத்தகங்கள் தாண்டி, இதற்கான வாய்ப்புகள் எடுத்துக் கூறும் வகையில்தான் இது போன்ற உரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதனடிப்படையில தமிழக அரசு 2024-2025 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மாபெரும் தமிழ் கனவு என்ற சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப்பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற 7 முதன்மையான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வரவு செலவு திட்ட அறிக்கையினை அறிவித்தது.
அதன்படி, தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்து இந்த ஏழு தலைப்புகளில் பொருளாதாரப் பேராசிரியர்கள் உரையாற்றுகிறார்கள். அதில் இருக்கக்கூடிய விவரங்களை டேட்டா அனாலிசிஸ் என்ற அடிப்படையில் தரவுகளை ஆய்வு செய்து செயல்படவில்லை என்றால் நாளை நீங்கள் செல்லக்கூடிய பணிகள் ரொம்ப சவாலாக இருக்கும். அதற்கு நிறைய நவீன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள், எந்த படிப்பு துறையில் நீங்கள் இருந்தாலும், அடுத்த 50 ஆண்டுகளில் உங்களுடைய பங்களிப்பு, உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சி என்னவாக இருக்கும் என்பது குறித்து நீங்கள் சிந்திப்பதற்கும், உரிய வழிகாட்டுதலை பெறுவதற்கும் தான் இந்த நிகழ்ச்சி. எனவே இந்த கிடைத்திருக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி, சிறந்த ஆற்றல் மிகுந்தவர்களாக நீங்கள் உங்கள் வாழ்விலும், சமூக வாழ்விலும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி அம்பை கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் முனைவர் மூ.செல்லதுரை சமூக நீதி என்ற தலைப்பில் தெரிவித்ததாவது: இந்தியாவிலேயே முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கக்கூடிய குழு அமைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் மட்டும்தான். அவர்களின் வழிகாட்டுதலின்படி தான் இந்த வரவு செலவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்டம் வளர்ச்சியில் உள்ள நன்மைகள் அனைத்து தரப்பினர்களுக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது. சம வாய்ப்பு சமமாக அனைவருக்கும் கிடைப்பது என்பது தான். நமது நாட்டில் உச்சபட்ச அதிகாரம் அரசியல் அதிகாரம் தான். ஆனால் அதை நேரடியாக பகிர்ந்து கொள்ள முடியாது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பின் மூலம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். அப்படி அதிகாரம் பெறுவது தான் empowerment என்ற வலிமை பெறுதல் மூலம் தான். ஒரு தனி மனிதன் வலிமை பெறும் போது, அவரைச் சார்ந்த அந்த குடும்பமும், ஒவ்வொரு குடும்பமும் வலிமை பெறும் போது சமூகமும் வலிமை அடைகிறது. விளிம்பு நிலையில் உள்ள மக்களை வலிமையடைய செய்ய வேண்டும்.இவர்களை வலிமைப்படுத்துவதற்கு அரசு ஒரு யுத்தியை பயன்படுத்துகிறது. அதுதான் சமூக நீதி கோட்பாடு. இதன் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. சமூகம் சார்ந்தும், கல்வி ரீதியாகவும் யார் பின்தங்கி உள்ளார்களோ அவர்களைத் தான் வலிமை செய்ய வேண்டும். நாம் இன்று முதல் பட்டதாரி பெறுவதற்கு 75 ஆண்டுகள் தவம் பெற்று இருக்க வேண்டி இருந்தது.என்றார்.