எமதர்மன் வேடம் அணிந்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய குழுவினர்
தேர்தல் விழிப்புணர்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று களியக்காவிளை பகுதியைச்சார்ந்த ஜெசிஐ தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
குறிப்பாக எமதர்மன் வேடமணிந்த கலைஞர் பொதுமக்களிடையே வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் காசுக்காக வாக்களிக்க மாட்டேன் என்று அறிவுறுத்தியதோடு, ஏப்ரல் 19ம் தேதி வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையினை ஆற்ற வேண்டுமென்றும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவித்தப்பட்டதன் படி,
அதற்கான படிவம் பெற்று இருப்பிடத்திலேயே வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்து வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இக்கலை பிரச்சாரமானது நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் துவங்கி, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தக்கலை பேருந்து நிலையம் மற்றும் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக இக்கலைக்குழுவினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.