கோவில்பட்டி அருகே மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை

கோவில்பட்டி அருகே மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை

கோப்பு படம் 

கோவில்பட்டி அருகே மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய பைனான்சியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இன்னாசிமுத்து (56). பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மருதம்மாள் (54). இவர்களது மகள் விமலா தேவி திருமணமாகி சென்னையில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்னாசிமுத்து மற்றும் அவரது மனைவி மருதம்மாள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இன்னாசிமுத்து மனைவியை வெட்டிக் கொலை செய்தார். நேற்று காலை மருதம்மாளின் தம்பி சின்னமருது, அவர்களது வீட்டுக்கு சென்றபோது சகோதரி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இன்னாசிமுத்துவிடம் தட்டிக் கேட்டார்.

அப்போது அவரையும் இன்னாசி முத்து அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய இன்னாசிமுத்துவை தேடிவந்தனர்.

இந்நிலையில், பாண்டவர் மங்கலம் அருகே மயங்கி நிலையில் இன்னாசிமுத்து கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மனைவியை கொலை செய்து விட்டு இன்னாசிமுத்துவும் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story