தி. மலை அருகே காலணிகளை மாலை போல அணிந்து சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிராமம், குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் இரா. ஜெகந்நாதன். பால் வியாபாரியான இவர், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவருக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டு, சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த இவர், 10-க்கும் மேற்பட்ட காலணிகளை மாலை போல அணிந்துகொண்டு வாக்கு சேகரிக்கத் தொடங்கினார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த அரசு அலுவலர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த இவர், தொடர்ந்து தனது இரு சக்கர வானத்தில் மாலையுடனேயே சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ள மத்திய பேருந்து நிலையத்துக்குச் சென்றார்.
வழிநெடுகிலும் இரு சக்கர, நான்கு சக்கர, பேருந்துகளில் சென்ற பொதுமக்கள் இவரை வியப்புடன் பார்த்தனர். பின்னர், மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள், பொதுமக்கள், வணிகர்களிடம் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.