திருப்பூர் மாவட்டத்தில் தமிழறிஞர்களுக்கு காசோலையை வழங்கிய அமைச்சர்
காசோலை வழங்கிய அமைச்சர்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 7 மாவட்டங்களைச் சேர்ந்த 116 தமிழறிஞர்களுக்கு ரூ.11.60 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், செங்கப்பள்ளி தனியார் மண்டபத்தில் முத்தழிறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு, கோயமுத்தூர், நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழறிஞர் உதவித்தொகை பெற்று வரும் 116 தமிழறிஞர்களுக்கு சிறப்பு நேர்வாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.11.60 லட்சத்திக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். அரசு செயலாளர் (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை) முனைவர் சுப்பிரமணியன், இயக்குநர், (தமிழ் வளர்ச்சித் துறை) ஔவை அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு தமிழறிஞர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.தொடர்ந்து அமைச்சர் காசோலைகளை வழங்கி, 1 நபருக்கு வாரிசு அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (பொ), தமிழ்வளர்ச்சித்துறை அ.புவனேசுவரி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.