துறையூர் அரசு மருத்துவமனையில் குரங்குகள் அட்டகாசம்

துறையூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அச்சுறுத்தும் குரங்குகளை அகற்றும்படி வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினந்தோறும் குரங்குகளின் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதால் மருத்துவமனையில் தங்கி உள்ள உள் நோயாளிகள் மிகுந்த அச்சத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் இது பற்றி அங்குள்ள உள் நோயாளிகளிடம் கேட்டபோது சாப்பிட முடியவில்லை உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று விடுகிறது.

மேலும் உறவினர்களுடன் வரக்கூடிய குழந்தைகள் நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தும் வகையில் குரங்குகள் ஒன்றிடம் ஒன்று சண்டையிட்டுக் கொண்டும் மருத்துவமனை வளாகத்தில் இரவு, பகலாக குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டும் இருப்பதால் மருத்துவமனைக்கு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் குரங்குகளை விரட்டியதில் குரங்குகள் விரட்டுபவர்களை கடித்த சம்பவமும் நடந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க மருத்துவமனைக்குள் மிகப்பெரிய அச்சுறுத்தலான கொசுக்கள் அதிக அளவில் உள்ளதால் நோய்களுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு புதுவித நோய்களை ஏற்படுத்தும் வகையில் கொசுக்கள் உள்ளதால் கொசு தொல்லையால் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் தினசரி அரசு மருத்துவமனை வளாகத்தில் கொசு மருந்து அடித்து நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் செவிலியர்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் குரங்குகளின் சேட்டையால் மிகுந்த அச்சத்துடனே பணி செய்ய வேண்டிய சூழலும் நிலவி வருகிறது.

ஆகையால் உடனடியாக வனத்துறையினர் மருத்துவமனையில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகள்அனைத்தையும் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட வேண்டும் எனவும் உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story