நகராட்சியில் எந்த தகவலையும் சொல்வதில்லை -துணைத்தலைவர் குற்றச்சாட்டு
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியின் மாதாந்திர நகர மன்ற கூட்டம் திமுகவைச் சேர்ந்த நகராட்சி தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக நகர்மன்ற குழு தலைவர் துரை சீனிவாசன் பேசுகையில், என்னுடைய வார்டில் நாயுடு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு எப்போது டெண்டர் விடப்பட்டது. ஒர்க் ஆர்டர் எப்போது கொடுத்தனர் என்ற விவரமே தெரியவில்லை. அங்கு சாலை அமைக்கும் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. திமுக கவுன்சிலரான எனக்கே தகவல் தெரியவில்லை என ஆதங்கமாக பேசினார். மேலும் இரட்டை கண் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் சீரமைக்க வேண்டும். அடுத்த மாதம் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அதற்கு முன்னதாக ரயில்வே சுரங்கப்பாதையை சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.
திமுகவை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ் பேசுகையில், எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் தலைவர் லட்சுமிபாரி எனக்கு தகவல் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் நிகழ்ச்சி நடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சொல்கிறார். அதனால் என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவதில்லை இது குறித்து நகராட்சி தலைவரிடம் கேட்டால் ஆணையரிடம் கேட்க சொல்கிறார். ஆணையாளரிடம் கேட்டால் நகராட்சி தலைவரிடம் கேட்கச் சொல்கிறார். நான் யாரிடம் கேட்பது என்றார்.
திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர் இருக்கும் நகராட்சியிலேயே அரசு நிகழ்ச்சிகள் கூட திமுகவை சேர்ந்த துணைத் தலைவரான எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்று குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் லட்சுமி பாரி பேசுகையில் மின் கட்டணமாக ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளோம். மேலும் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கே ரூ. ஒரு கோடியே 70 லட்சம் தேவைப்படுகிறது. வருமானமே இல்லாத நகராட்சியில் பொது நிதியில் குறைந்தபட்ச வேலைகளே செய்ய செய்ய முடிகிறது என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.