நீலகிரி; தேர்தல் பறக்கும் படை அதிகரிப்பு!
பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் மக்களவை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான ரொக்கப் பணத்தை உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படைகள், நிலைய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை செய்யபடுகிறது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய 6 தொகுதிகளில் இதுவரை ரூ.2.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை ரூ.1 கோடியே 12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 வாரங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நீலகிரியில் பறக்கும் படை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அருணா கூறியதாவது: நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 108-உதகமண்டலம், 109-கூடலூர்(தனி) மற்றும் 110-குன்னூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் தற்போது தலா 9 பறக்கும் படை குழுக்கள், தலா 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தலா ஒரு வீடியோ கண்காணிப்புக் குழு என மொத்தம் 57 குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் அறிவுரைப்படி, நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை தீவிரமாகக் கண்காணிக்க ஏதுவாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக தலா 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் கூடுதலாக ஒரு வீடியோ கண்காணிப்புக் குழுவும், 109-கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் கூடுதலாக 3 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் தற்போது நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 108-உதகமண்டலம், 109-கூடலூர் (தனி) மற்றும் 110- குன்னூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் 24 மணிநேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.