கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் ரூ.3 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள்
கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு
கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் ரூ.3 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள். கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக வெள்ளாளபுரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு கூடம், ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்தில் அரசு நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.22¼ லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கச்சுப்பள்ளி ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கிராமப்புற விளிம்பு நிலை மக்களுக்கான வீடுகள் புனரமைப்பு பணிகள் மற்றும் எருமைப்பட்டி ஊராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், ரேஷன் கடை உள்ளிட்ட கொங்கணாபுரம் ஒன்றிய பகுதிகளில் ரூ.3 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 11 திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் சம்பந்தப்பட்ட அரசு திட்டப்பணிகளை உரிய கால அவகாசத்திலும், தரமான முறையில் கட்டி முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது கொங்கணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story