கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கட்சி துணை நிற்கும் - வழக்கறிஞர் நன்மாறன்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பிஜேபி தலைமையிலான கூட்டணி என போட்டியிட்டாலும் நாம் தமிழர் கட்சி மட்டும் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று களமாடியது. தமிழகம் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக அறுதி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதேசமயம் அனைத்துக் கட்சியினரும் வாக்காளர்களுக்கு கையூட்டாக பணம், பரிசுப் பொருள் கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளனர்.ஆனால், நாம் தமிழர் கட்சி எப்போதும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி மட்டுமே அளிக்கும். பணமோ, பொருளோ அளிக்காது. அப்படி இருந்தும் கூட தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு நேர்மையான வாக்குகள் விழுந்து குறிப்பிட்ட இடத்தையும் பிடித்துள்ளது.
இதனிடையே கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொண்ட கட்சியினருக்கு கரூர் மேற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான நன்மாறன் தலைமையில், கரூர்- அரவக்குறிச்சி சாலையில் உள்ள டெக்ஸ் பார்க் பகுதியில், தனியார் கூட்டரங்கில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. கட்சிப் பணியாற்றி கணிசமான வாக்குகள் பெறுவதற்கு உறுதியாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் புகைப்படம் பிரசுரிக்கப்பட்ட நினைவு பரிசுகளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் கட்சியினர் இடையே பேசிய வழக்கறிஞர் நன்மாறன்,கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தனிப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும் கட்சி துணை நிற்கும். முதல் ஆளாக நான் அங்கு வந்து நிற்பேன் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் மைக்கேல், கிழக்கு மாவட்ட தலைவர் பார்த்திபன், அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் சக்திவேல், கரூர் தொகுதி செயலாளர் செங்குட்டுவன், கிருஷ்ணராயபுரம் தொகுதி தலைவர் கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.