பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் பயணியர் அமரும் இருக்கை மாயம்
இருக்கைகள் மாயம்
பள்ளிப்பட்டு நகரின் மேற்கில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணி, சோளிங்கர், வேலுார் மற்றும் ஆந்திர மாநிலம், சித்துார், புத்துார், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்திற்கு, தினமும் 1,000த்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பயணியரின் வசதிக்காக, பேருந்து நிலையத்தில் இருக்கை மற்றும் மின்விசிறிகள் அமைக்கப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த மின்விசிறிகள் பழுதடைந்து செயல்படுவது இல்லை. மேலும், பயணியர் அமருவதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகளும் மாயமாகின. இந்நிலையில், பயணியர் காத்திருக்கும் பகுதியையும் ஆக்கிரமித்து,
கடைகள் இயங்கி வருகின்றன. இதனால், முதியோர், பெண்கள் மற்றும் நோயாளிகள் அமருவதற்கு இருக்கை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில், மின்விசிறி மற்றும் இருக்கை வசதிகளை மீண்டும் அமைக்க, பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.