சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள் - காத்திருந்த அதிகாரிகள்
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி அகமலை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கு இதுவரையில் சாலை வசிதி இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரக்கோரி தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரையில் சாலை வசதி செய்து தரவில்லை எனக் கூறி ஊரடி ஊத்துக்காடு உள்ளிட்ட 10 மலை கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சோத்துப்பாறை அணை அருகே மலை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமர்ந்து காலை 9 மணி முதல் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மலை கிராம மக்களிடம் பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மலை கிராம மக்கள் தொடர்ந்து தங்களுக்கு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே ஊத்துக்காடு வாக்குச்சாவடி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை குதிரைகளில் ஏற்றி செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அலுவலர்கள் செய்வதறியாது நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி அளவில் தேனி மாவட்ட திட்ட அலுவலர் அபிதாகனிப் பெரியகுளம், போடி வட்டாட்சியர்கள், தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மலை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மலை கிராம மக்களின் சாலை வசதியை தேர்தல் முடிந்த பின் உடனடியாக துவக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து எட்டு மணி நேரமாக தேர்தலை புறக்கணிக்க போவதாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ஊத்துக்காடு வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை இரண்டு குதிரைகளில் ஏற்றி வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மலை கிராமத்திற்கு நடந்து சென்றனர்.