காங்கேயம் ஈஸ்வரன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளை சிறைபிடித்த மக்கள்
காங்கேயம் ஈஸ்வரன் கோவிலில் அறநிலையத் துறை அதிகாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் - பரபரப்பு காங்கேயம் ஈஸ்வரன் கோவிலில் உள்ள பழமையான கோவில் சிலைகளை பத்திரப்படுத்தும் விதமாக அறநிலையத் துறை சார்ந்த அதிகாரிகள் நேற்று கோவிலுள்ள 17 சிலைகளை எடுத்து சென்றனர். அப்பகுதி பொதுமக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அறநிலைத்துறை அதிகாரிகளை கோவில் வளாகத்திற்குள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்திற்குள் போலிசார் குவிக்கப்ட்டனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் பழையக்கோட்டை சாலையில் மிகவும் பழமையான ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அறநிலைத்துறை கட்டுபாட்டில் உள்ளது. கடந்த ஒரு வருட காலமாக இந்த கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த கோவிலுள்ள சன்னதியில் இருந்த சிலைகள் கோவிலுள்ள உள்பக்க அறையினுள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அறநிலைத்துறை உத்தரவின் பேரில் அதிகாரி அன்னக்கொடி தலைமையிலான குழு பழைய கோட்டை சாலையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.
கோவிலின் உள்பக்க அறையில் வைக்கப்பட்டிருந்த 17 சுவாமி சிலைகளை சிவன்மலை கோவில் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் மாவட்ட உலோக திருமேனி பாதுகாப்பு மையத்திற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க உள்ளோம் என கோவில் குருக்களிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 17 சிலைகளையும் கணக்கிட்டு அறநிலை துறை அதிகாரிகள் கோவிலில் இருந்து எடுத்துச் செல்லும் பொழுது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அறநிலையை அதிகாரிகளை கோவில் வளாகத்திற்குள் கதவை மூடி சிறை பிடித்தனர்.
தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கோவில் வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவது மற்றும் சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காங்கேயம் துணை கண்காணிப்பாளர் கு. பார்த்திபன் இருதரப்பினரையும் பேசி சமாதானம் செய்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார். பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க கோவிலின் கட்டுமான பணிகள் முடிவடைந்ததும் கோவிலில் எடுக்கப்பட்டுள்ள சிலைகள் மீண்டும் கோவிலுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என அறநிலையத்துறை ஆணையர் அன்னக்கொடி தெரிவித்தார் இதனை அடுத்து சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சிவன்மலை அடிவாரப் பகுதியில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.