வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது!
திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள குமரன் நினைவகம் பின்புறம் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று ரயில் மூலமாக திருப்பூர் வந்துள்ளார். ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் திருப்பூர் குமரன் நினைவகம் பின்புறம் இவருடைய செல்போன் மற்றும் பையை நபர் ஒருவர் வழிப்பறி செய்ய முயற்சித்துள்ளார். அவர் கூச்சலிடவே பொதுமக்கள் உதவியுடன் அந்நபரை பிடித்து வைத்து வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜீவா (20) என்பதும் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து கொண்டு ரயில் நிலையத்திலேயே படுத்து உறங்கி வந்தவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் ஜீவாவை வடக்கு போலீசார் கைது செய்தனர்.