மல்லாங்கிணறு பகுதியில் விசாரணைக்கு வந்தவர் தற்கொலை முயற்சி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(30). இவரது மனைவி முனியம்மா. காளீஸ்வரன் டிரைவர் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காளீஸ்வரன் ஒரு பெண்ணை கிண்டல் செய்ததாக மல்லாங்கிணறு போலீசார் காளீஸ்வரனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே காளீஸ்வரன் திடீரென காவல் நிலையத்தின் மாடிக்கு ஓடிச்சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், இதில் காளீஸ்வரன் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்தாகவும் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மல்லாங்கிணறு போலீசார் காளீஸ்வரனை விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காளீஸ்வரன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.