பேசிவிட்டு தருவதாக கூறி செல்போனை நூதனமாக அபேஸ் செய்த ஆசாமி!
திருப்பூர் காங்கேயம் ரோட்டில் சி.டி.சி. டெப்போ எதிரே உமர் எனபவருக்கு சொந்தமான பார்த்தி ஸ்டூடியோ உள்ளது. உமரின் ஸ்டுடியோவில் அந்த பகுதியை சேர்ந்த கலைவாணி (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு டிப் டாப் உடை அணிந்தபடி 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சென்றுள்ளார். அவர் தனக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என புகைப்படம் எடுக்க எவ்வளவு பணம் என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார். இதற்கு கலைவாணி பதில் அளித்துள்ளார்.
இதன் பின்னர் கடைக்கு வெளியே சென்று விட்டு திரும்ப வந்த ஆசாமி, தான் வீட்டிற்கு போன் செய்ய வேண்டும் என கலைவாணியிடம் செல்போனை கேட்டுள்ளார். அவரும் தந்துள்ளார், ஆனால் அந்த ஆசாமி செல்போனுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். நீண்ட நேரம் ஆகியும் அந்த ஆசாமியை காணாததால் கடைக்கு வெளியே சென்று கலைவாணி பார்த்த போது, தான் செல்போனுடன் ஆசாமி மாயமானது தெரியவந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…