இந்து முன்னணியை பார்த்து காவல் துறையே பயப்படும் நிலை: நீதிபதி வேதனை

இந்து முன்னணியை பார்த்து காவல் துறையே பயப்படும் நிலை: நீதிபதி வேதனை

மதுரை கிளை

இந்து முன்னணியை பார்த்து காவல் துறையே பயப்படும் நிலை உருவாகியுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் கடந்த மாதம் 7-ம் தேதி இரவு பெண் காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரயில்வே காவல் துறையினர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு 3 பேர் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.

இதைப் பார்த்த பெண் காவலர் கோயில் முன்பு ஏன் மது அறுந்துகிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தங்கள் உள்ளாடைகளை கழட்டி, போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். மேலும், கோயில் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெண் காவலர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் காவல் துறையினரையும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதையடுத்து, பெண் காவலரை தரக்குறைவாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் குபேந்திரன் என்பவர் இந்து முன்னணி மாவட்ட செயலாளர், ரவி என்பவர் அவரது சகோதரர் மற்றும் முத்தமிழ்ச்செல்வன் என்பவர் அந்த இயக்கத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இந்நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து மீண்டும் குபேந்திரன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார். மேலும், சமூகத்தில் இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை இருந்தது. ஆனால், தற்போது காவல்துறையே அவர்களை பார்த்து பயப்படும் அளவிற்கு நிலை மோசமாகி விட்டது என நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்தார்.

Tags

Next Story