தொழிலதிபரை தாக்கிய நபரை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை !
முற்றுகை
இளம்பிள்ளை அருகே ஜவுளி தொழிலதிபரின் காரை வழிமறித்து தாக்கியவரை கைது செய்ய கோரி நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி காட்டூர் பகுதியை சேர்ந்த குருசாமி மகன் சுந்தரமூர்த்தி (51). இவர் சொந்தமாக ஜவுளி உற்பத்தி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இரவு சொந்த வேலையாக தனது காரில் சேலத்தில் இருந்து கொம்பாடிபட்டி சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது பெருமாகவுண்டம்பட்டி ராமணா தியேட்டர் பகுதியில் திடீரென இவரது காரை ஒரு கும்பல் வழிமறித்து கீழே இறங்கச் சொல்லி தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த இவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தொழிலதிபரை தாக்கிய இளம்பிள்ளை அருகே உள்ள சுண்டெலிபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி மகுடஞ்சாவடி காவல் நிலையத்தினை சுந்தரமூர்த்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
அது மட்டும் அல்லாமல் ஜெயக்குமார் என்பவர் பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் வாடகை கட்டிடத்தில் ஜிம் நடத்தி வருவதாகவும், மேலும், பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், ஜிம் சென்டரை உடனடியாக காலி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து சங்ககிரி டிஎஸ்பி ராஜா மற்றும் மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியும் கூட்டம் கலையவில்லை. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மற்றும் அவருடன் இருந்த 10 க்கு மேற்பட்டோரை உடனடியாக கைது செய்தால் மட்டுமே நாங்கள் கடந்து செல்வோம் என உறுதியாக இருந்து வருகின்றனர்.