வாழைத்தார்கள் விலை கடும் உயர்வு

வாழைத்தார்கள் விலை கடும் உயர்வு

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் வாழைத்தார்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு ஏரல், குரும்பூர், லால்குடி, திருச்செந்தூர், ஆரல்வாய்மொழி, தூத்துக்குடி, பேய்குளம், நாசரேத், காவல்கிணறு, வள்ளியூர் மற்றும் அம்பாசமுத்திரம், ஆலங்குளம், முக்கூடல், விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூர், அடைச்சாணி, இடைகால், ஆழ்வார்குறிச்சி, கடையம், பாப்பான்குளம், அச்சன்புதூர், இலஞ்சி, வடகரை, ராஜபாண்டி, துவரங்காடு, சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.விற்பனைக்கு வரும் வாழைத்தார்களை கேரளா மொத்த வியாபாரிகள் ஏலத்திற்கு எடுத்து திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோழிக்கோடு உட்பட பல பகுதிகளுக்கும் உள்ளூர் வியாபாரிகளும் தங்கள் கடைகளுக்கு தேவையான வாழைத்தார்களை கொள்முதல் செய்வர். கடந்த சில வாரங்களுக்கு முன் வாழைத்தார்கள் வரத்து அதிகமாக இருந்தது.

சராசரியாக 2000 முதல் 3000 வாழைத்தார்கள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியால் வாழைத்தார்களை கொள்முதல் செய்வதற்கு பெரும்பாலான வியாபாரிகள் வராததால் வாழைத்தார்கள் குறைந்த விலைக்கு விற்பனையானது. ஆனால் தற்போது தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் வாழைத்தார்கள் அறுவடை முடிவடையும் தருவாயில் இருப்பதால் மார்க்கெட்டிற்கு சராசரியாக 3000 வாழைத்தார்களுக்கு மேல் வரத்து இருந்தது.ஆனால் கடந்த சில நாட்களாக 500 முதல் 1000 வாழைத்தார்கள் வரைதான் விற்பனைக்கு வருகின்றன. வரத்து குறைவால் இதுவரை இல்லாத அளவிற்கு விலை கூடுதலாக விற்கப்பட்டது. கடந்த வாரம் ₹200க்கு விற்ற ரோபஸ்டா ₹400 முதல் ₹500க்கும், நாட்டு வாழை ₹200லிருந்து ₹400க்கும், கோழிக்கோடு ₹200லிருந்து ₹350க்கும், கதலி ₹150லிருந்து ₹200க்கும், சக்கை வாழை கிலோ ஒன்றுக்கு ₹6லிருந்து ₹15க்கும், செவ்வாழை ₹400லிருந்து 700க்கும், கற்பூரவள்ளி ₹100லிருந்து ₹300க்கும் விற்பனையானது. இதேபோன்று வாழை இலை 200 எண்ணம் கொண்ட கட்டு ₹200லிருந்து ₹400 முதல் ₹500 வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story