தூத்துக்குடியில் மீன்கள் விலை கடும் உயர்வு

தூத்துக்குடியில் மீன்கள் விலை கடும் உயர்வு

மீன்கள் 

மீன்கள் வரத்து குறைவு காரணமாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் ஆழ் கடலுக்கு சென்று தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் சனிக்கிழமைகளில் திரும்பி வருவது வழக்கம். கடந்த 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் பெரும்பாலான மீனவர்கள் கடந்த 29-ந் தேதி அன்று ஆழ்கடலுக்கு மின்பிடிக்க சென்றனர். இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் நேற்று குறைந்த அளவு படகுகளே கரைக்கு திரும்பின.

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று 2 நாட்களில் திரும்பியதால் அவர்களின் படகுகளில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டமும், வியாபாரிகள் கூட்டமும் அலைமோதியது.

தேவை அதிகமாக இருக்கும் நிலையில் மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்தது. வழக்கமாக ஒரு கிலோ ரூ.700-க்கு விற்ற சீலா மீன் நேற்று ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. விளைமீன் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரையும் ஊழி மீன் கிலோ ரூ.600 வரையும், பாறை மீன் கிலோ ரூ.500 வரையும், நண்டு கிலோ ரூ.700 வரையும், வங்கனை மீன் கிலோ ரூ.200 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.3 ஆயிரத்து 500 வரைக்கும், கீரிமீன் சாளை கூடை ரூ.2 ஆயிரம் வரையும் விற்பனையானது. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் நேற்று சீலா மீன் கிலோ ரூ.1,500 வரையும்,

விளைமீன் ரூ.800 வரையும், ஊளி மீன் ரூ.700 வரையும், சாளை மீன் கிலோ ரூ.200 வரையும் விற்பனையானது. வழக்கமாக கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் போது அசைவ உணவுகளை தவிர்ப்பதால் இந்த காலங்களில் மீன்களின் விலை குறைந்து காணப்படும். ஆனால் தற்போது மீன்களின் வரத்து குறைவாக காணப்படுவதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. மீன்களுக்கு நல்ல விலை இருந்தும் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.

Tags

Next Story