தங்கச்சங்கிலியை பறித்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவில்பட்டியில் கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலை கதிா்வேல் நகரைச் சோ்ந்தவா் செல்லத்துரை. பசுவந்தனை சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாராம். வெள்ளிக்கிழமை மதியம் கடையில் அவரது மனைவி அம்பிகா (37) இருந்துள்ளார். அப்போது கடைக்கு வந்த ஒருவா் கேட்டதன்பேரில் துணிகளை எடுக்க அம்பிகா திரும்பியுள்ளார். அப்போது அந்த நபா் அம்பிகாவை தாக்கி அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

அம்பிகாவின் கூச்சலைக் கேட்ட அப்பகுதி மக்கள் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநா்கள், தப்பி ஓடிய நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். நகை பறிப்பில் ஈடுபட்டவா், தூத்துக்குடி அண்ணா நகா் 12ஆவது தெருவை சோ்ந்த துரைராஜ் மகன் முருகானந்தம் (50) என்பது விசாரணையில் தெரியவந்தது. காயமடைந்த அம்பிகா, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, முருகானந்தத்தை கைது செய்தனா்.


Tags

Next Story