சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீர் வெளியேற்றிய தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை
சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீர்
சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீர் வெளியேற்றிய தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சீனிவாசன் பேட்டை மாந்தாங்கல் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சிறு, சிறு தொட்டிகளுக்கு குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் மோட்டார் மூலம் கழிவு நீரை பம்ப் செய்து சுத்திகரிப்பதற்காக பெரிய அளவிலான தொட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம் . இந்நிலையில் இன்று சில கம்பெனியினர் சுத்திகரிக்கப்படாத கெமிக்கல் கலந்த கழிவு நீரை சிறு தொட்டிகளுக்கு அனுப்பி உள்ளனர். அந்த தொட்டிகள் நிரம்பி சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேறி உள்ளது . மேலும் ஆறு போல கழிவு நீர் வெளியேறியுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஒரு தோல் தொழிற்சாலை அருகில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் கொத்தனார் ஒருவர் கட்டுமான பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டதால் தோல் தொழிற்சாலை கழிவுநீரை மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள மழை நீர் கால்வாயில் திருப்பி விட்டுள்ளார் . இதனால் கெமிக்கல் கலந்த கழிவு நீர் துர்நாற்றம் வீசி குமட்டல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கொத்தனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர் . தகவல் அறிந்து ராணிப்பேட்டை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் எந்த தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் வெளியேறியது என்பது குறித்து ஒவ்வொரு தொழிற்சாலையாக ஆய்வு நடத்தினர். மேலும் நீரின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story