மக்கள் நல பணியாளர் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம்
நாமக்கல் மாவட்டம் , பரமத்திவேலூர் அருகே வில்லிபாளையத்தை சேர்ந்த துரைராஜ் மனைவி தமிழ்ச்செல்வி (வயது40). மக்கள் நல பணியாளர். இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தமிழ்ச்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்ச்செல்வி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை தமிழ்ச்செல்வி உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தமிழ்ச்செல்வி தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்.
அதில் மற்றவர்களால் தற்கொலைக்கு தூண்டியது தெரிய வந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.