தக்கலையில் விசாரணைக்கு சென்ற போலீசை கத்தியால் குத்திய ரவுடி
குமரி மாவட்டம் தக்கலை அருகே கவியலூர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர், தனது மகன் சஜீவன்ராஜ் (40) வீட்டின் ஜன்னல் கதவுகளை அடித்து நொறுக்கி ரகளை செய்வதாக நேற்று முன்தினம் நள்ளிரவு தக்கலை போலீசுக்கு அவசர அழைப்பு கொடுத்துள்ளார். இதையடுத்து இரவில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் இருந்த சுஜின் (36) ,ஸ்டாலின் ஆகிய போலீசாரிடம் சம்பவ இடம் சென்று விசாரிக்க உயர் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இரண்டு பேரும் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடீரென அங்கு வந்த சஜீவன்ராஜ் போலீசாரை பார்த்து தகாத வார்த்தைகள் பேசியதுடன், தான் கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். அதை போலீஸ் சுஜின் தடுத்துள்ளார். இதில் சுஜினுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட மற்றொரு போலீஸ்காரர் சஜீவன் ராஜை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடி விட்டார். இதில் காயமடைந்த சுஜின் சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தக்கலை போலீசார் சஜீவன் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சஜீவன்ராஜ் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தக்கலை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story