கால்வாயை மூடி சாலை அமைக்க முயற்சி தடுத்து நிறுத்திய ஊரக வளர்ச்சி அதிகாரிகள்.....
சாலை அமைக்கும் பணி
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, எஸ்.எஸ்., நகரில், சாலை வசதி இல்லாத தெருவிற்கு சாலை அமைக்க அப்பகுதியினர் சிலர் முடிவு செய்தனர்.
ஆனால், ஊராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி எதுவும் பெறாமல், சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் கட்டட கழிவுகளை கொட்டி, சாலை அமைக்க முதற்கட்ட பணியை தன்னிச்சையாக நேற்று துவக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் எஸ்.எஸ்., நகரில் ஆய்வு செய்து, சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கோனேரிகுப்பம் எஸ்.எஸ்., நகரில் கால்வாயை மூடி சாலை அமைப்பது குறித்து வந்த புகாரை தொடர்ந்து, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை மற்றும் கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகத்திடம் எந்தவித அனுமதி பெறாமல் எஸ்.எஸ்., நகரைச் சேர்ந்த சிலர், சாலை அமைக்க முடிவு செய்தது தெரியவந்தது.
மேலும், சாலையோரம் உள்ள மழைநீர் செல்லும் கால்வாயை தன்னிச்சையாக மூடியுள்ளனர். இதனால், மழைக்காலத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி அப்பகுதியில் மழைநீர் சூழும் என்பதால், சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தவும், மழைநீர் வடிகால்வாயை மூடி கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை உடனே அகற்றவும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.