இரண்டாவது நாளாக நடைபெறும் சின்னங்கள் பொருத்தும் பணி

இரண்டாவது நாளாக நடைபெறும் சின்னங்கள் பொருத்தும் பணி

சின்னம் பொருத்தும் பணி

நாமக்கல் மாவடத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி இரண்டாவது நாளாக நடைப்பெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவு வருகின்ற 19.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்கள் 20.03.2024 முதல் 27.03.2024 வரை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த வகையில், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit), கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Unit), வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPAT) ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் தொடர்புடைய சட்டமன்ற தொகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சங்ககிரி, இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி-வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,661 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்றைய தினம் (10.04.2024) தொடங்கப்பட்டது. இப்பணிகளில் 600-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இரண்டாவது நாளாக சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி மின்னணு பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சி.சி.டிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் மீண்டும் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். வாக்குப்பதிவின் போது தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும். இந்நிகழ்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருமதி சே.சுகந்தி (திருச்செங்கோடு), திரு.ச.பாலாகிருஷ்ணன் (பரமத்தி வேலூர்), திரு.ச.பிரபாகரன் (சேந்தமங்கலம்), கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (வட்டாட்சியர்கள்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story