சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய நிழற்குடை
நிழற்குடை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையம் இல்லாததால், படப்பை அடுத்த ஒரகடத்தில் 2014ம் ஆண்டு, 1.80 கோடி ரூபாய் மதிப்பில் திறக்கப்பட்ட, திறன் மேம்பாட்டு மையம் செயல்படாமல் இருந்தது.
இதையடுத்து, 2020 முதல், இம்மையத்தை அரசு தொழில் பயிற்சி நிலையமாக மாற்றி, ஐந்து தொழிற்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு பேருந்தில் வந்து பயிலும் மாணவர்களின் வசதிக்காக, தொழிற்பயிற்சி நிலையத்தின் எதிரில், வண்டலுார் - - வாலாஜாபாத் சாலையில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, இருபுறங்களிலும் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் இப்பேருந்து நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அரசு தொழிற்பயிற்சி நிலைய பேருந்து நிறுத்தத்தில், ஓராண்டாக அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. மாணவர்கள், நிழற்குடையில்லாத பனப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று பேருந்து பிடித்து சென்று வருகின்றனர். இதனால், அரசு தொழிற்பயிற்சி நிலைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை வீணாகி வருவதோடு, இரவு நேரங்களில் சமூக விரோதிகளில் கூடாரமாக செயல்படுகிறது. மேலும், அங்கு அமர்ந்து மது அருந்தும் மர்ம நபர்கள், நிழற்குடையில் உள்ள பதாகைகள் மற்றும் இருக்கைகளை சேதப்படுத்துகின்றனர்.
இதனால், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடை வீணாகி வருகிறது. எனவே, அங்கு அரசு பேருந்து நின்று செல்ல வழிவகை செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.