சிவகங்கை அருகே பெற்ற தாய்க்கு ரூ.1 கோடி செலவில் கோவில் கட்டிய மகன்கள்

சிவகங்கை அருகே பெற்ற தாய்க்கு ரூ.1 கோடி செலவில் கோவில் கட்டிய மகன்கள்

தாய்க்கு கோவில் கட்டிய மகன்கள்

சிவகங்கை அருகே தாய்க்கு ரூபாய் 1 கோடி செலவில் கோவில் அமைத்து மகன்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்

சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி முத்துக்காளி அம்மாள். இவர்களுக்கு சண்முகநாதன் சரவணன், சந்தோஷ்குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் சண்முகநாதன் புதுக்கோட்டையில் சூடம் தயாரிக்கும் கம்பெனியும், 2வது மகன் சரவணன், 3 வது மகன் சந்தோஷ்குமார் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் தாயின் வளர்ப்பால் தான் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்ததாகவும், தனது மகன்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவர் கடந்த 2021 ம் ஆண்டு தனது 63 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

தாய் இறந்தது முதல் சோகத்தில் வாழ்ந்து வந்த மகன்கள் தங்கள் தாய் மீது கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்த கருவில் சுமந்து தங்களை கரை சேர்த்த தாய்க்கு பெருமை சேர்க்க சொந்த ஊரில் கோவில் கட்ட முடிவு செய்தனர்.

அதற்காக கட்டட நிபுணர்கள், கைவினை கலைஞர்கள் ஆகியோருடன் ஆலோசித்து தாய்க்கு ரூ. 1 கோடி செலவில் கோவில் கட்டினர். இந்த கோவிலில் தங்கத்தால் செய்யப்பட்ட கலசம் பொருத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தினர். பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அம்மாவின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோவில் கருவறையில் 580 கிலோ எடையில் 5 அடி உயர ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலைகள் அமைத்து, நான்கு கால பூஜைகளுடன் யாக வேள்வி நடத்தி வேத விற்பன்னர்கள், வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் செண்டைமேளம் ஒலிக்க, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

யாகசாலையில் இருந்து கலசங்கள் கோபுரத்திற்கு கொண்டு சென்று புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் உறவினர்கள் கிராம மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

Tags

Next Story