மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் அறிவிப்பு

மாதாந்திர உதவித் தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளை வரும் ஜூலை.16 இல் ஆட்சியர்களிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தஞ்சை மாவட்டக்குழு கூட்டம் , மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி தலைமையில், தஞ்சை பாலாஜி நகர் மருந்தாளுநர், மருத்துவப் பிரதிநிதிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், மாநில பொதுச் செயலாளர் பி.ஜான்சிராணி கலந்து கொண்டு மாநிலக்குழு முடிவுகளைப்பற்றி பேசினார். மேலும் இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர்கள் பழ.அன்புமணி, ஏ.மேனகா, மாவட்டப் பொருளாளர் கே.மோகன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சி.ஏ.சந்திரபிரகாஷ், கோவி.ராதிகா, ஏ.சாமியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஜே.ராஜேஷ்கண்ணா, மதியழகன், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு, மாதாந்திர உதவித் தொகைக்காக மனு கொடுத்து கடந்த ஒரு வருட காலமாக காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளை ஒன்று திரட்டி எதிர்வரும் ஜூலை.16 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைப்பது, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய100 நாள் வேலைத்திட்டத்தை மாவட்டம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் துவக்கி, கிராமங்களில் இருக்கக்கூடிய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதோடு முழுமையான சம்பளம் ரூபாய் 319 ஐ வழங்கிட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் வசிக்கக்கூடிய குடும்பங்களில் உள்ள குடும்ப அட்டைகளை ஏழை குடும்ப அட்டையாக மாற்றி , மாதம் தோறும் 35 கிலோ அரிசி ரேஷன் கடைகளின் மூலம் இலவசமாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தஞ்சை மாவட்டத்தின் சார்பாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 1,500 மாற்றுத்திறனாளிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டமாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story