சாலையில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவர்
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (46). பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ம் தேதி இரணியல் கோர்ட் அருகில் உள்ள டாக்டர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். பணத்தை பாக்கெட்டில் வைத்த அவர் வேலைக்கு சென்று விட்டார். அங்கு வைத்து பணத்தை எண்ணியபோது ரூ. 5 ஆயிரத்தை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் நெய்யூர் முரசன்கோடு பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் விஜின் (20) கல்லூரி தேர்வு எழுதிவிட்டு அரசு பேருந்தில் வந்து இரணியல் கோர்ட் பஸ்டாப்பில் இறங்கியுள்ளார். அப்போது கீழே ரூ. 5 ஆயிரம் பணம் கிடப்பதை பார்த்த அவர் காவல் நிலையத்தில் பணத்தை கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறி சென்று விட்டார். போலீசார் உரிய விசாரணைக்குப்பின் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் முன்னிலையில் ராஜேஷ்குமாரிடம் பணத்தை விஜின் ஒப்படைத்தார். கீழே இருந்து கிடைத்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த விஜின் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.