திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் போராட்டத்தை தொடர முடிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இறுதி முடிவுகள் எட்டப்படாததால், கரும்பு விவசாயிகள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.

இந்த கூட்டத்தில் புதிய சர்க்கரை ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகையை 75 விழுக்காடு வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் செயல்பட்டு வந்தது. இந்த ஆலைக்கு அந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கரும்புகளை வெட்டி அரவைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016-2018ம் ஆண்டில் விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு, ஆலை நிர்வாகம் கரும்புக்கான சட்டப்பூர்வ விலையை தரவில்லை. மேலும், கரும்புக்கான தொகையை தருவதாக கூறி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் கணக்கு தொடங்கக் கூறி, அதன் மூலம் விவசாயிகளின் பெயரில் பல கோடி ரூபாயை கடனாக பெற்று ஆலை நிர்வாகம் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது.

இதையடுத்து விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகத்தின் சார்பில் ஓராண்டு கழித்து நோட்டீஸ் வந்த பின்னர் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, விவசாயிகள் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஆலை நலிவடைந்துவிட்டதாக கூறி முறையிட்டது. இதையடுத்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மூலம் திருஆரூரான் சர்க்கரை ஆலையை கால்ஸ் டிஸ்ட்லரீஸ் நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பாக வாங்கி, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. இதற்கு கரும்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து,

விவசாயிகள் பெயரில் போலியாக வாங்கிய சுமார் ரூ.300 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிபில் பிரச்சினையை தீர்க்க வேண்டும். கரும்பு வழங்கியதற்கான நிலுவைத் தொகையை புதிய நிர்வாகம் வழங்க வேண்டும் என ஆலை நிர்வாகம் முன்பு கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் பிரச்சினைகள் தீரவில்லை. இதையடுத்து போராட்டம் நேற்று 353 வது நாளாக நீடித்தது. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி.செழியன், எம்பிக்கள் செ.ராமலிங்கம், எஸ்.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கால்ஸ் டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகள் பலரும் கரும்புக்கான நிலுவைத் தாகையை 100 சவீதமும், அதற்குண்டான வட்டியுடன் சேர்த்து தர வேண்டும். வங்கியின் சிபில் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும், வங்கியில் போலியாக பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். அப்போது கால்ஸ் நிறுவனம் விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை 57 விழுக்காடு வழங்குவதாக கூறியது. ஆனால் அமைச்சர், எம்பிக்கள், ஆட்சியர், விவசாயிகள் கேட்டு கொண்டதன்படி 75 விழுக்காடு வழங்குவதாக கூறியுள்ளனர். இந்த தொகையை 10 தினங்கள் கழித்து வழங்குவதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கு கரும்பு விவசாயிகள் ஒப்புக் கொள்ளவில்லை.

அதே நேரத்தில் வங்கியின் சிபில் பிரச்சினைக்கு மாநில அளவில் சிறப்பு குழு அமைத்து தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனை வரவேற்ற விவசாயிகள் சிபில் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையிலும், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையிலும் ஆலையின் முன்பாக நடைபெறும் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். சுமார் ஓராண்டாக நடைபெறும் விவசாயிகளின் போராட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிகள், முடிவு ஏதும் எட்டப்படவில்லை என்பதால் கரும்பு விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

போராட்டம் தொடரும்: கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், கூறியதாவது: முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையான, நிலுவைத் தொகையை 100 விழுக்காடு வழங்கக் கோரினோம். வங்கி கடன் தள்ளுபடி, சிபில் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினோம். ஆனால், கால்ஸ் நிறுவனம் 75 விழுக்காடு வரை மட்டுமே நிலுவைத் தொகையை வழங்குவதாக கூறியது.

இதை மேலும் பரிசீலனை செய்யுமாறு அமைச்சர் உள்ளிட்டோர் ஆலை நிர்வாகத்திடம் பேசினர். இதில் முடிவு ஏதும் எட்டவில்லை. எனவே கரும்பு விவசாயிகளின் போரட்டம் தொடர்கிறது" என்றனர்.

Tags

Next Story