ஏற்காட்டில் வரும் 22-ம் தேதி கோடை விழா துவக்கம்
சேலம் ஏற்காட்டில் கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 47-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு ஏற்காடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் தூய்மை பணிகள், குடிநீர், சுகாதார வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது. நெடுஞ்சாலை துறை மூலம் ஏற்காடு செல்லும் சாலைகளில் எச்சரிக்கை பலகைகள் கூடுதலாக அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளன. சுற்றுலா துறை மூலம் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும். படகு போட்டிகள் நடத்தப்படும்.
சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள், பெண்களுக்கான விளையாட்டு, சமையல் போட்டிகள் நடைபெறும். சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பாதிப்பு குறித்து சுற்றுலா பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. தேவையான இடங்களில் தானியங்கி எந்திரம் மூலம் மஞ்சப்பை வழங்கப்படும். பிளாஸ்டிக் இல்லாத விழா ஏற்காடு சுற்றுலா பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே பிளாஸ்டிக் இல்லாத ஏற்காடு கோடை விழாவாக கொண்டாட சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.