கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன் களைகட்டியது
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை சீசன் கடந்த 15 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் காரணமாக சில நாட்கள் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் முடிந்த பின் இன்று ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
திருவேணி சங்கமம், சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் ஆதிகாலையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தரிசனத்திற்கான பக்தர்கள் கூட்டம் ஏராளம் பேர் காணப்பட்டனர்.
மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணமாக உள்ளனர். பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடுவிக்கப்பட்டதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து செல்வதற்காக இன்று காலை 6 மணியிலிருந்து சுற்றுலா பயணிகள் படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8:00 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியதும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.