டூ வீலரில் சென்ற டீ மாஸ்டர் கால்வாயில் விழுந்து பலி !
பலி
டூ வீலரில் சென்ற டீ மாஸ்டர் கால்வாயில் விழுந்து பலி- காவல்துறை வழக்குபதிவு. கரூர் மாவட்டம், குளித்தலை, நச்சலூர் அருகே புக்குழியை சேர்ந்தவர் குப்ப கவுண்டர் மகன் தர்மர் வயது 47.இவர் அப்பகுதியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி இரவு 9 மணி அளவில், நெய்தலூர் இந்திரா நகரில் உள்ள தனது அக்கா தனபாக்கியம் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் தனது ஊரான நச்சலூர் அருகே புக்குழிக்கு அவரது டூவீலரில் சென்றுள்ளார்.
நெய்தலூர்- நச்சலூர் சாலை குறுகிய சாலையாக இருந்த திருப்பத்தில் தர்மர் டூவீலரில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, சாலை ஓரத்தில் இருந்த கால்வாயில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. டீ மாஸ்டர் தர்மர் வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர், காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தேடிய போது, நள்ளிரவு ஒரு மணி அளவில் சாலையின் அருகே விவசாய கால்வாயில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
பின்னர் தர்மர் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது குறித்து குளித்தலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.