கலந்தாய்வை நிறுத்தி வைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது 

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை பணி மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட 228 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் ஆங்காங்கே பணியிடங்கள் மறைக்கப்பட்டு வெளிப்படையற்ற தன்மையுடன் முறைகேடாக நடந்த கலந்தாய்வுகளைக் கண்டித்தும், பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்க கல்வி) முன்பு புதன்கிழமை காலை 11 மணியளவில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியல் போராட்டத்திற்கு டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர் க.மதியழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ராகவன் துரை, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் எழிலரசன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் இரா. கண்ணதாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.இதில், 71 பெண்கள் 67 ஆண்கள் என 138 பேர் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 138 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல், தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் எழிலரசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் இரா கண்ணதாசன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ராகவன் துரை, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் குமார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்று, அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு அந்த சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் 90 பேரையும், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் 138 பேர் என மொத்தம் 228 ஆசிரியர், ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story