தலைமை ஆசிரியை வீட்டில் 18 பவுன் நகை திருட்டு
திருட்டு நடந்த வீடு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலை முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன். இவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்குமணி. இவர் ராசப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று ருக்குமணி துரைச்சாமி புரத்தில் உள்ள தனது சகோதிரி வீட்டிற்கு சென்று விட்டார். குமரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். குமரனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் நேற்றிரவு மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்த ருக்குமணி வீட்டில் ஒரு அறையின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அறையில் இருந்த பீரோவினை பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 18பவுன் தங்க நகை திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதையெடுத்து ருக்குமணி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். குமரன் தூங்கி கொண்டு இருந்த அறையின் அருகேயுள்ள அறையில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களில் மட்டும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் 4வது திருட்டு சம்பவம் என்பது குறிப்படதக்கது. தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் கோவில்பட்டி பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.