வெம்பக் கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

வெம்பக் கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

வெம்பக் கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு பணி துவங்கியுள்ள நிலையில் இங்கு கண்டறியும் பொருட்களை விருதுநகரில் அமையும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கவும், இங்குள்ள சான்றுகளை ஆவணப்படுத்தி நூலாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடகரை பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்கால வரலாற்றை அறிவதற்கான அகழாய்வு கடந்த 2022ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 2 கட்ட அகழாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று 3ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார். அகழாய்வு தளத்தில் துவக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்று அகழாய்வு நடைபெறுவதை பார்வையிட்டார். முன்னதாக நடைபெற்ற 2 கட்ட அகழாய்வில் 7914 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மூலம் தொன்மையான மனிதர்கள் இங்கு சங்கு வளையல் தயாரிக்கும் தொழில் கூடம், கண்ணாடி மணிகள் தயாரிப்பு கூடம் அமைந்திருந்தது, வைப்பாறு வழியாக கடல்வழி வாணிபம் மேற்கொண்டதற்கான பல்வேறு சான்றுகள் அறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று துவங்கியுள்ள 3ம் கட்ட அகழாய்வு அகழாய்வில் தொன்மையான மனிதர்களின் மேலும் பல வரலாற்று சிறப்புகளை அறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க விழா நிகழ்ச்சியில், பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏற்கனவே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், 3ம் கட்ட அகழாய்வு பணிகள் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் விருதுநகரில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில் தொல்லியல் அகழ் வைப்பகம் ஏற்படுத்தி வெம்பக்கோட்டையில் கண்டெடுக்கப்படும் தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தவும், அகழாய்வு மூலம் கிடைக்கப்பெறும் சான்றுகளை ஆவணப்படுத்தி இப்பகுதியின் வரலாறு குறித்து நூல்களாக எழுத தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Tags

Next Story