அயோத்திக்கு புறப்பட்டு சென்ற ரயில்
இனிப்பு வழங்கிய பாஜகவினர்
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான கலந்துகொண்டு ராமரை வழிபட்டு வருகின்றனர். நாடு முழுவதிலுமிருந்து சலுகை கட்டணத்தில் ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து நேற்று இரவு 9:45 மணிக்கு சிறப்பு ரயில் படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகளுடன் அயோத்திக்கு புறப்பட்டு சென்றது.
இதனை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்ஸவா மற்றும் சிவகங்கை மாவட்ட பா.ஜ., தலைவர் சத்தியநாதன், ஆகியோர் பூக்களை தூவி ரயிலை வழியனுப்பி வைத்தனர். இந்த ரயிலில் தொடர்ந்து 6 நாட்களுக்கு பயணம் செய்யும் பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம், ராமர் கோயிலில் தரிசனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி., ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்க உள்ளது. மானாமதுரை ரயில்வே நிலையத்திலிருந்து 350 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணம் மேற்கொண்ட நிலையில் ரயில் கிளம்பியவுடன் ஏராளமானோர் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என பரவசமாக கோஷம் எழுப்பினர். அயோத்திக்கு சிறப்பு ரயில் கிளம்புவதை தொடர்ந்து மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும் ரயில்வே போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக ரயிலில் பயணம் செய்த பக்தர்களுக்கு பாஜக சார்பில் இனிப்புகள் மற்றும் உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன