காங்கேயத்தில் நெடுஞ்சாலையில் இருந்த மரம் இரவில் வெட்டி அகற்றம்
வெட்டப்பட்ட மரம்
காங்கேயம் பகுதி திருப்பூர் சாலையில் சென்னியப்பா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் 20 ஆண்டுகளாக சாலையோரம் இருந்த வேப்பமரம் நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரத்தை வைத்து வெட்டி அகற்றப்பட்டது.
இதனை அடுத்து காங்கேயம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மரம் வெட்டப்பட்ட இடத்தை நேற்று காலை பார்வையிட்ட காங்கேயம் கிராம நிர்வாக அலுவலர் மரங்களை வெட்ட வேண்டும் என்றால் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும்,
இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும், மேலும் வெட்டப்பட்ட மரம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது எனவே இந்த பிரச்சினையை இது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிக்கும், காங்கேயம் தாசில்தார் மயில்சாமி கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன் என கூறினார்.
மேலும் காங்கேயம் பகுதியில் தற்போது இது போன்று உரிய அனுமதி இன்றி மரங்கள் வெட்டுவது அதிகரித்து வருவதால் இசை செயல்களை தடுக்கும் பொருட்டு இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என காங்கேயம் தாசில்தார் மயில்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். மேலும் கடந்த ஒருவருட காலங்களில் காங்கேயம் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்த மரங்களை தொழிலதிபர்கள் உறுதுணையுடன் வெட்டி அகற்றப்பட்டுள்ளது இதுகுறித்து புகார் கொடுத்தான் இதுவரை அபராதம் விதிக்கவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.