லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
பைல் படம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அடுத்த வீரப்பட்டி கிராமம் அருகே இரண்டு கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் வீரப்பட்டி கிராமம் வழியாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு கனரக லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு செல்லும் லாரிகள் அதிகளவு பாரம் ஏற்றி செல்வது மட்டுமன்றி அதிவேகமாக செல்வதால் வீரப்பட்டி கிராமத்தில் தொடா் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவா்கள் அச்சத்துடன் சாலையில் கடந்து செல்லும் நிலை உருவானது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நிா்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் உரிய தீா்வு ஏற்படவில்லை. இந்நிலையில் வழக்கம் போல அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற லாரிகளை வீரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சுசீலா ராணி தலைமையில் கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த எட்டயபுரம் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதிக பாரம் மற்றும் அதி வேகமாக செல்லும் லாரிகள் மீது அபாரதம் விதிப்பதாகவும், இனிமேல் இது போன்று அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிவேகமாக சென்றால் லாரியை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.