அன்பை வெல்லும் ஆயுதம் உலகில் கண்டு பிடிக்கப்படவில்லை - துணைவேந்தர்
நூல் வெளியீட்டு விழா
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறையும், தஞ்சையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பும் இணைந்து, “சமய நல்லிணக்க விழா மற்றும் மறைமலையடிகளார் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய தொண்டு” என்னும் புலவர் ஆதி.நெடுஞ்செழியனின் நூல் வெளியீட்டு விழா தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தினர்.
இதில், தலைமை வகித்துப் பேசிய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் பேசுகையில், "உலகில் எத்தனையோ கருவிகளும், ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவை சக மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டாலும், அன்பை வெல்லும் ஓர் ஆயுதம் உலகில் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை" என்றார். இவ்விழாவில், விஜிபி உலகத் தமிழ்ச்சங்க நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் பங்கேற்று நூலை வெளியிட்டு விழாப்பேருரை நிகழ்த்தினர். உலகிற்குத் தேவைப்படும் சமய நல்லிணக்கம் குறித்து, தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், குடந்தை பள்ளிவாசலின் இமாம் மவ்லவி அபூதாஜி பைஜி பாகவி ஆகியோர் பேசினர். பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறைத் தலைவர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புலவர் ஆதி.நெடுஞ்செழியனின் நூல் படிகளைத் தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் பெற்றுக்கொண்டனர். நூலாசிரியர் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் ஏற்புரையாற்றினார். நிறைவாக அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஞா.பழனிவேலு நன்றி கூறினார்.