தாத்தாவுக்கு திதி கொடுக்கச் சென்ற பெண் கடலுக்குள் தவறி விழுந்து பலி
பலியான பெண்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து போன தாத்தாவுக்கு, 16 ஆம் நாள் திதி கொடுக்க சென்ற பெண், கடலுக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம், பேராவூரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே களத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் க.காளிமுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவரது மகள் வடிவு (45) சத்துணவு அமைப்பாளராக, சித்துக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வடிவுவின் தாத்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார். அவருக்கு திதி கொடுப்பதற்காக மே.16 ஆம் தேதி வியாழக்கிழமை சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோரா கடற்கரைக்கு வடிவு தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். அங்கு நண்பகல் சுமார் 12 மணியளவில் கடலுக்குள் இறங்கி உறவினர்களுடன் தண்ணீரில் மூழ்கி சடங்குகளை செய்துள்ளனர்.
அப்போது வடிவு தவறி விழுந்து கடலுக்குள் மூழ்கியுள்ளார். இதில் கடல்நீரை அவர் குடித்து, மூச்சுக் குழாய்க்குள் சென்றதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
இதை அடுத்து பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வடிவுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடிவு உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வடிவு உடல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பெண் கடலில் மூழ்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும், அவர் சற்று உடல் குறையுடைய மாற்றுத்திறனாளி எனவும் கூறப்படுகிறது. கடல் நீர் மூச்சுக் குழாயில் புகுந்ததால் மரணம் சம்பவித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.