சேலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
சின்னம் பொருத்தும் பணி
சேலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி. 2-வது நாளாக நடந்த பணியை தேர்தல் அலுவலர் ஆய்வு.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நடைபெற்ற இந்த பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. சேலம் நாடாளுமன்ற தொகுதி யில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சேலம் கணேஷ் கலை, அறிவியல் கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 1,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 1,200 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்படும். பின்னர் வாக்குப்பதிவுக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் ஜெகநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story