வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி !

வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில்  முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி !

 ச.உமா

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (24.05.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் (Randomization) முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு மற்றும் 87.சங்ககிரி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரங்கள் (VVPAT) ஆகியவை 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் சட்டமன்றத் தொகுதிவாரியாக வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ௬ சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4.6.2024 அன்று திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 87.சங்ககிரி, 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர் மற்றும் 96.திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள 87.சங்ககிரி, 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர் மற்றும் 96.திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 17 தேர்தல் நுண்பார்வையாளர்கள், 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் என மொத்தம் 51 பணியாளர்கள் வீதம் 102 தேர்தல் நுண்பார்வையாளர்கள், 102கண்காணிப்பாளர்கள், 102 உதவியாளர்கள் என மொத்தம் 306 நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், கூடுதலாக தயார் நிலையில் 306 நபர்கள் உள்ளனர்.

தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் எஸ்.பி.ஜோஷி அவர்கள் மற்றும் செயலாளர் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்) மதுசூதன குப்தா அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப அவர்கள் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), ச.பிரபாகரன் (சேந்தமங்கலம்), த.முத்துராமலிங்கம் (இராசிபுரம்), ச.பாலாகிருஷ்ணன் (பரமத்தி), லோகநாயகி (சங்ககிரி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ந.சிவக்குமார், வட்டாட்சியர் (தேர்தல்) திருமுருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story