திற்பரப்பில் உள்துறை அமைச்சக அதிகாரியிடம் திருட்டு
திருவனந்தபுரம் வண்டிதடம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் (42). இவர் கேரளாவில் உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். ஹரிஷ் தனது நண்பருடன் காரில் கடந்த 26 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். மறுநாள் காலையில் திற்பரப்புக்கு சென்றுள்ளனர். திற்பரப்பு பகுதியில் உள்ள பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டு, நண்பர்களுடன் ஹரிஷ் அருவியில் குளிக்க சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது காரின் இடது பக்க கண்ணாடி திறந்திருந்தது. மேலும் காரில் இருந்த விலையுயர்ந்த இரண்டு செல்போன்கள், லேப்டாப், கேமரா ஸ்மார்ட் வாட்ச், ரொக்க பணம் ரூ. 45 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து , ஹரிஷ் குலசேகரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை பற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.திற்பரப்பு அருவிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்லும் நிலையில், காரை திறந்து மர்ம நபர்கள் கொள்ளயடித்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.