டாஸ்மாக்கில் கைவரிசை - வடமாநில கொள்ளையன் கைது
கைது
தூத்துக்குடி 2-ம் கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 15-ந்தேதி நள்ளிரவில் மர்மநபர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் 25 மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இதில் நள்ளிரவில் அப்பகுதியில் வடமாநில கும்பல் சந்தேகப்படும்படியாக நடமாடியது தெரிய வந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மத்தியபாகம் மோட்டார் சைக்கிள் ரோந்து போலீஸ்காரர், தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்களிடம் போலீஸ்காரர் விசாரித்தார். அப்போது அந்த கும்பல் இருளில் தப்பி ஓடியது. எனினும் அவர்களை விரட்டிச் சென்ற போலீஸ்காரர், வடமாநில கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கி பிடித்தார். தொடர்ந்து மற்ற போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராய்சிங் (வயது 30) என்பதும், பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.