ஈஷா யோகா மையத்தில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருட்டு; இருவர் கைது!
ஈஷா யோகா மையத்தில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருட்டு; இருவர் கைது
கோவை:ஆலாந்துறை அடுத்த முட்டத்துவயல் பகுதியில் ஈசா யோகா மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தில் மின்சாதனப் பொருட்கள் வைக்க பயன்படும் அறையை அங்கு பணியாற்றும் சச்சிதானந்தம் என்கிற சச்சின் (25) என்பவர் கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஈசா யோகா எலக்ட்ரிக்கல் பிரிவு பொறுப்பாளராக உள்ள சுவாமி திடாபதி திடீரென மின்சாதன அறையை ஆய்வு செய்த போது அங்குள்ள மின்பொருட்கள் குறைவாக இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அங்கிருந்த சச்சிதானந்தத்திடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தான் அங்கு பணியாற்றும் மேலும் 21 பேருடன் சேர்ந்து கொஞ்சம்,கொஞ்சமாக மின்சாதன பொருட்களை வெளியே விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார்.கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இருந்து இரண்டாண்டுகளாக மின் சாதன பொருட்களை திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஈசா யோகா மையத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு ஊழியர் காளிதாஸ் அளித்த புகார் அடிப்படையில் அங்கு பணியாற்றி வரும் ஆலாந்துறையை சேர்ந்த சச்சிதானந்தன் (25) மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (26) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து ஆலாந்துறை போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.மேலும் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.