பாறை முகடுகளாக காட்சி அளிக்கும் தென்பெண்ணை ஆறு

அரூர் அருகே டி.அம்மாபேட்டை பகுதியில் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் நீர் வறண்டு சிறு ஓடை போல பாறை முகடுகளில் மட்டும் ஆங்காங்கே தண்ணீர் காணப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.அம்மாபேட்டை நீப்பத்துறை தென்பெண்ணையாற்றில் சென்னியம்மன் பாறை மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் நீப்பத் துறைக்கு வந்து தென் பெண்ணை ஆற்றில் புனித நீராடி முடி காணிக்கை செலுத்தி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. அப்போது தென் பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இருகரைகளையும் தொட்டு ஆர்ப்பரித்து சென்றது. தற்போது கோடை காலம் என்பதாலும், போதிய மழையில்லாததாலும் பரந்து விரிந்த தென்பெண்ணை ஆறு, சிறு ஓடை போல சுருங்கி ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் தண்ணீர் வரத்து இல்லாததால் ஆற்றுப்பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது.தற்போது தண்ணீர் வழிந்தோடிய பகுதிகள் வறண்டு பாறை முகடுகளாக காணப்படுகிறது. இதனால் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவருகிறது.

Tags

Next Story